ஒருநாளைக்கு இரண்டு முறை சூரியன் உதிக்கும் வாய்ப்பு இருக்கிறதா?


ஓ... இருக்கிறது. ஆனால் பூமியில் அல்ல..!

ஒரு நாளைக்கு இரண்டு முறை சூரியன் உதிக்கும் வாய்ப்பு புதன் கிரகத்தில் இருக்கிறது. புதன் கிரகம் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அதனால் ஒரு நேரம் புதன் கிரகம் சூரியனிலிருந்து 45 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இன்னொரு நேரம் 67 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்போது புதனின் வேகம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் கிலோமீட்டர். சூரிய மண்டலத்திலேயே அதி வேகத்தில் பயணிக்கிற கிரகம் புதன்தான். புதனின் சுற்றுப்பாதை இப்படி அமைந்துள்ளதால் புதன் கிரகத்தின் வானில் சூரியன் ஒரு நேரம் பெரிதாகவும் இன்னொரு நேரம் சிறியதாகவும் காணப்படும்.

சுற்றுப்பாதை வேகம் அதிகம் என்பதாலும் அச்சில் சுழலும் வேகம் மிகக் குறைவு என்பதாலும் புதனில் குறிப்பிட்ட சில இடங்களில் சூரியன் உதயமாகிய பிறகு அதே கிழக்கு திசையில் மறையும். பிறகு மறுபடி உதிக்கும். சூரிய மண்டலத்தில் இப்படி ஒரே நாளில் இரண்டு தடவை சூரியன் உதிக்கிற அதிசய கிரகம் புதன் மட்டுமே! (அறிவியல்)