இணையமூடான செட்டிங், அழைப்பு மற்றும் மெசேஜிங் அப்ளிகேசன்கள் சிலவற்றை சவுதி அரேபியா நிரந்தரமாக தடை செய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கைப், வைபர், வட்ஸெப் போன்ற பிரபல அப்ளிகேசன்களை தடை செய்யபோவதாக சவுதி அரசாங்கம் அண்மையில் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் இத்தடை விரைவில் அமுலுக்கு வரலாம் எனவும் அது நிரந்த தடையாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தொலைத்தொடர்பாடல் விதிமுறைகளுக்கு ஏற்ப குறித்த நிறுவனங்கள் ஒத்துழைக்க மறுக்கின்றமையே தடைக்கான காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதுவே இம்முடிவுக்கான முக்கிய காரணமெனவும் இதனை அந்நிறுவனங்கள் மறுக்கும் பட்சத்தில் தடை உறுதியாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்ற காரணத்தை முன்வைத்தே சவுதி அரசாங்கம் பிளக்பெரி மெசெஞ்சர் சேவையை 2010 ஆம் ஆண்டு தடைசெய்திருந்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட புரட்சியின் போது சமூகவலையமைப்புகள் மற்றும் மெசேஜிங் அப்ளிகேசன்கள் முக்கிய பங்கு வகித்திருந்தன.
எனவே தனது நாட்டிலும் அத்தகைய புரட்சிகள் ஏற்படுவதைத் தடுக்க சவுதி தற்போது கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
இதேபோல் சவுதியில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் அந்நாட்டு இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது.
இதனால் வெளிநாட்டு பிரஜைகள் குறிப்பாக இந்தியர்கள் மற்றும் இலங்கை நாட்டவர் பலர் தங்களது தொழிலை இழக்க நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் அது உள்ளாநாட்டில் புரட்சிக்கு வித்திடலாம் என சவுதி அஞ்சுவதாக தெரிகின்றது.
எதிர்வரும் காலங்களிலும் சவுதியில் அரசாங்கத்திடமிருந்து இதேபோன்ற பல அதிரடியான நடவடிக்கைகளை எதிர்ப்பார்க்கலாம்.