2016 இல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட அடிப்படையில் குறித்த வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு

துறையூர் தாஸன்(சஞ்சயன்)

 மண்முனை தென்மேற்கு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்று 2016 இல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட அடிப்படையில் குறித்த வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு 02.12.2016 பிற்பகல் 3.30 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்  தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ கி.துரைராஜசிங்கம் முதன்மை அதிதியாகவும் மட்டக்களப்பு மேற்கு ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன்,மட்டக்களப்பு மேற்கு பிரதிக் கல்வி நிர்வாக அலுவலகப் பணிப்பாளர் செ.மகேந்திரன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் போன்றோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

முதன்மை அதிதி தனது உரையில் பாடத்திட்டத்தில் 27 தொழிநுட்ப பாடங்களை புகுத்துவதற்காக அரசு திட்டமிட்டு வருகிறதெனவும் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெற்றோருக்கான பரீட்சை எனவும், பரீட்சைக்கு மாணவர்களை தயாராக்குவது பெற்றோரின் தலையாய கடமையாக அமைவதுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, அருகில் இருந்து தட்டிக்கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 மட்டக்களப்பு மேற்கு ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன், கௌரவ கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்களால் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பெற்றார்.

 கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினர், “கற்றலை ஊக்குவித்து ஆற்றலை வளர்ப்போம்“ எனும் மகுட வாக்கியத்துக்கேற்ப மண்முனை தென்மேற்கு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்று கடந்த 2016 புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட அடிப்படையில் குறித்த வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற, 12 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 31 மாணவர்களை பாராட்டிக் கௌரவித்தனர்.

 கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மற்றும் மட்டக்களப்பு மேற்கு, மண்முனை தென்மேற்கு கல்வி அலுவலர்களினால் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பெற்றனர். மேலும் மண்முனை தென்மேற்கு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட 12 பாடசாலைகளுக்கு ஆங்கில அகராதிகளும் வழங்கி வைக்கப்பெற்றன.

 இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆலயவண்ணக்கர், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் உள்ளிட்ட பல தரப்பட்டோர் இதன்போது கலந்து கொண்டனர்.